பக்கம்:புகழ்மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை...


நாம் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், அந்தத் துறையைச் சார்ந்த முன்னோடிகளை நினைத்துப் பார்ப்பது நன்றியுடைமையாகும்.அப்படி நம் துறை சார்ந்த முன்னோடிகளை நினைத்துப் பார்ப்பதைப் போன்றே பல்வேறு துறை சார்ந்தவர்களைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.அவர்களைப் பற்றி நம்முடைய எழுத்துக்களில் பதிவு செய்ய வேண்டும்.
நான் பல்வேறு காலகட்டங்களில் பல துறைகளில் சிறந்து விளங்கிய பெருமகன்களைப்பற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்தப் புகழ்மாலை.
இந்தப் புகழ்மாலையில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட அறிஞர் பெருமக்கள், கவிஞர் பெருமக்கள், அரசியல் வாதிகள், வள்ளல் பெருமக்கள் ஆகியோரும் அடங்குவர்.
புகழ் பெற்ற பலரையும் நினைவுபடுத்தி நான் எழுதிய இந்நூலுக்கு எந்தப் பெயர் வைக்கலாம் என்று பலநாள் சிந்தித்துப் பார்த்தேன். இறுதியாக இந்தத் தலைப்பு எண்ணத்தில் உதித்தது.இதுதான் இந்த நூலுக்குரிய சிறந்த தலைப்பு என்றே கருதுகிறேன்.
எதையுமே உரையில் சொல்வதைக் காட்டிலும், கவிதையில் சொல்லுவது சிறப்பாக மட்டுமின்றி, மனதில் பதியும் வகையில் அமையும்.
வளரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் பெருமக்கள் பலரையும் நினைவு கூர்ந்து தொடர்ந்து எழுதலாம்.தனது பெற்றோர் பற்றிக்கூட எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கும்.
புகழ்பெற்ற பலருக்கு கவிமாலையாக நான் தொடுத்த இந்தப் புகழ் மாலையை படித்துப் பயன்பெறுங்கள்.

அன்புடன்,

14-01-1996

சுரதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/5&oldid=1491274" இலிருந்து மீள்விக்கப்பட்டது