பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *8

அவருடைய நாட்களில் சந்தோஷங்களுக்கே இடம் இல்லாது போயிற்று. என்றோ வரக் கூடிய மரணத்தை எதிர்பார்த்து அவர் காத்திருப்பது போலிருந்தது. சில சமயங் களில் அவருடைய மனமே அதை சொல்லிச் கொண்டது. சாவு சீக்கிரமே வந்துவிட்டால் நல்லது. அர்த்தமற்ற வாழ்க்கையில் வீணாக எது எதையோ செய்து பொழுது போக்குவதில் என்ன பிரயோசனம் செத்துப் போவதே தேவலை.

இந்த நினைப் போடுதான் சிவசிதம் பரம் அந்த வேளையில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தார். மாலை நேரம். பொங்கிப் பிரவாகித்துச் சுழித்து அலை ஏற்றிப் புரண்டோடும் நதி மாதிரி நாகரிக ரஸ்தா இயங்கிக் கொண்டிருந்தது.

விதம் விதமான வேக வாகனங்கள். அவசரம் அவசரமாக விரையும் பலரகப் போக்குவரத்து சாதனங்கள். பரப் பரப்போடு செல்லும் பாதசாரிகள். அங்கங்கே தடைகளாய் நின்று விடும் சில வண்டிகள், மனிதர்கள்.

அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. வெறுப்பு நுரையிட்டது. சனியன்கள் எதுக்கு இத்தனை வேகம்? என்ன எழவுக்கு இத்தனை அவசரம்? சாகப் போகிற பீடைகள்.

தன்னுள் அலைபுரண்ட எண்ணத்தில் லயித்திருந்த சிவசிதம்பரம் தன்னை அறியாமலேயே ரஸ்தாவின் ஒரத்தை விட்டு நகர்ந்து மத்தி என்று சொல்லப்பட வேண்டிய அளவுக்கு ரோட்டில் வந்து விட்டார்.

அப்போது அவர் எதிர்பாராத அதிர்ச்சி அவருக்கு நேரிட்டது. -

வேகமாக எதிரே வந்த மோட்டார் பைக் அவரை மோதுவதுபோல் நெருங்கியது. பின்னேயிருந்து ஒரு ஆட்டோ ரிக்ஷா வெகு அவசரமாக வந்தது.