பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

107

பின்னிருந்து “நாங்க பாக்கல...” என்று இளவட்டங்கள் சிரிக்கின்றன.

வசதியான வண்டி விளம்பரம் இது. இத்தகைய உருவேற்றல்கள் சமுதாயத்தை எங்கே கொண்டு செல்கின்றது? அந்தந்தப் பருவத்துக்குரிய ஈர்ப்புகள், ஆசைகள். இயல்புதான். ஆனால், வயது முதிர முதிர, உலகியல் அனுபவங்களில் உணர்வுகள் புடம்போட்ட சொக்கத் தங்கமாக மாற வேண்டும்.

இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு, உயிர் வாழ இன்றியமையாததான நீர், காற்று, நல்ல மண் போன்ற இயற்கையின் கொடைகளைக்கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில் முதிய சமுதாயம் இருப்பதைத் தம் குற்றமாக உணர வேண்டும். மனிதநேயங்கள் தேய்ந்து விட்டன என்ற புலம்பல்களை விடுத்து, தன்னலமற்ற தியாகம் இன்னா செய்தாரையும் மன்னித்தருளும் தகைமை, அன்பு என்று முதிய தலைமுறை வழிகாட்ட வேண்டும். இந்த நோக்கில் அபகரங்களாக ஒலிக்கும் விளம்பரங்களும் செய்திகளும் செல்லாக்காசுகளாக மதிப்பிழக்க வேண்டும்.

‘தினமணி’
28.10.2003