பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

புதியதோர் உலகு செய்வோம்

பொறிகளைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவளாகத்தான் இருக்க முடியும். பல்வேறு துறைகளில் பெண் தன் அறிவாற்றலை நிரூபித்து, பதவிகளை அலங்கரிக்கலாம். இது தனிப்பட்ட ஆற்றலின் வெளிப்பாடாக விளங்குகிறது. ஆனால், குடியரசு நாட்டில், அரசியல் ஆட்சிப் பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் ஒப்பி அளிக்கும் தீர்ப்பில் நிலைபெறுகிறது.

இந்தத் தீர்ப்பில், பெண்ணின் தனிப்பட்ட ஆற்றல் தேவையில்லை. அவள் எழுதப்படிக்கத் தெரியாதவளாக இருக்கலாம். அவளைத் தேர்ந்தெடுக்கும் மக்களே முக்கியமாகின்றனர். ஏனெனில், ஆணாதிக்கக் கட்டுமானத்தின் ஒரு முக்கியமான கூறாக இந்தப் பிரதிநிதி விளங்க வேண்டும்.

கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்வுக்கு நிறுத்தப்படும் பெண்கள், கணவன், சகோதரன், மாமன், அல்லது கட்சி சார்ந்த (ஆண்) ஆதிக்கங்களின் பிரதிநிதிகளாகவே விளங்குகின்றனர். என்றாலும், முற்றிலும் இருள் சூழ்ந்த ஒர் அறையில், கூரையினுடே வரும் ஓர் ஒளிக்கதிர்போல் பெண்களுக்கு இது சுயஉணர்வைப் பற்றிய பிரக்ஞையை அவர்களறியாமலே ஏற்படுத்தலாம். அந்த ஒளிக்கதிரில் துரசுகளும் மாசும் பளிச்சென்று தெரிந்தாலும் அது ஒளிக்கதிர்.

ஆனாலும், ஆணாதிக்க அடையாளங்களை அவள் தாங்கியே நிலைக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில், பாலியல் சார்ந்த அவதூறுகளோ, (உண்மைகளோ) அவள் உட்காரும் பீடத்துக்கடியில் ஒரு தீக்குச்சிக் கொள்ளி பெரும்பான்மை கரியச் செய்யப் போதுமானது. இந்தக் காரணங்களால், ஒரு பெண் ஆட்சியதிகாரங்களை எப்படியேனும் பெற்றாலும்கூட ஆணாதிக்கத் தடத்தில்