பக்கம்:புதிய கோணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புதிய கோணம்

சொல்லும்பொழுதே அசைவு, சலனம், சுழற்சி ஆகியவை தோன்றி விடுகின்றன. ஆகவே, விசும்பு தைவரு வளி’ என்று கவிஞன் சொல்லும்பொழுது, ஆகாயத்தைத் தடவிக் கொடுக்கின்ற காற்று மண்டலம் என்று சொல்லும் பொழுது, ஒரளவு இப்பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறதென்ற கருத்தையும் பெற வைக்கின்றான் புலவன். பூமியின் மேல் தொடங்கி விசும்பு மண்டலத்தில் விரிந்து செல்லும் இக்காற்று மண்டலம் விசும்பைத் தைவருகிறது; அதாவது தடவிக் கொடுக்கிறது என்று சொல்வானேயானால் அதில் ஏதோ ஒரு ஆழ்ந்த கருத்து இருத்தல் வேண்டும். தடவிக் கொடுக்கின்ற சிறப்பைப்பற்றிப் பாடும் பொழுதே அவ்வளி மண்டலத்தின் அசைவை அதாவது பூமியினுடைய சுழற்சியைக் கூறுபவனாக ஆதல் வேண்டும். இல்லாவிட்டால் விசும்பு தைவரு வளி’ என்று கவிஞன் பாடியிருக்கமாட்டான். விஞ்ஞானக் கருத்தைப் பாடுவது புலவனுடைய நோக்கமன்று. கவிதை புனைய வந்த அவனிடம் இயல்பாக அமைந்துள்ள கூர்த்த அறிவும் விஞ்ஞான அறிவும் சேர்ந்து தொழிற்படத் தொடங்குகின்றன. அதன் பயனாகச் சிறந்த கவிதை ஒன்று பிறக்குமாறு செய்வதே அவனுடைய தலையாய நோக்கம். இரண்டாவதாகக் கிடைக்கும் பலன் அன்றைய மக்களிடம் காணப்பெற்ற விஞ்ஞான அறிவின் பிரதிபலிப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/170&oldid=659878" இலிருந்து மீள்விக்கப்பட்டது