பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சு. சமுத்திரம் மீண்டும் கண்களை மூடினார். முருக தோத்திரப் பாடலுக்குப் பதிலாக, ஒரு தடவை அவர் குருநாதர் உபதேசித்தது இப்போது பெரும் முழக்கத்தோடு ஒலித்தது. "மகனே! கர்மவினை என்று இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது. கண் முன்னாலேயே திருடிய ஒருவன் அளவுக்கு மீறி அடிபடும்போதுகூட இரக்கப்படுவது மனித இயல்பு. அதுதான் ஈஸ்வரத்தன்மை. எப்போவோ ஒரு பிறவியில் ஒருவன் எதையோ செய்தான் என்பதற்காக அவன் இந்தப் பிறவியில் கர்மாவின் பலனை அனுபவிப் பான் என்று நினைத்து அப்படி அவனை அனுபவிக்க விடுவதும் அலட்சியப்படுத்துவதும் முறையல்ல. அது ஈஸ்வர திருவுள்ளமும் அல்ல...' சாமியாரால், கோவிலுக்குள், ஒருமித்த உள்ளத்துடன் இருக்க முடியவில்லை ஈஸ்வரா...என்னைவிட இந்த தொழுநோயாளி எவ்வளவோ மேலானவன். உன்மேல் உரிமையுடன் கோபித்து, நிந்தாஸ்துதி செய்தான். மனிதர்கள், காலனிடமிருந்து தப்புவதற்காக உன்னை தஞ்சமடையும்போது, அவனோ உன்னிடம் காலனை ஏன் காட் டல...' என்று கேட்கிறான். அந்த நோயாளிக்கு கருணை காட்டக்கூடாதா... மருந்தாகவோ அல்லது மரணமாகவோ வரப்படாதா...' அருவிநீர் கூடிய தடாகத்தில், ஒரு மரத்தின் கொம்பு ஒடிந்து, சலனச் சத்தம் கேட்டது. சாமியார் எழுந்தார். பறவைகளும் ஒலியெழுப்பத் துவங்கிவிட்டன. குடிசைக்குப் போய், அருகேயுள்ள நந்தியாவட்டச் செடிகளிலிருந்து, பூப் பறித்து மாலை தொடுக்க வேண்டும். தூரத்துக் கிராமத்தில் இருந்து, ஒரு சிறுவன் பால் கொண்டு வந்துவிடுவான். அவன் வரவும், இவர் மாலை தொடுத்து முடிக்கவும் சரியாக இருக்கும். பூஜையைத் துவக்கும் நேரமும் வந்துவிடும்.