உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கிடைக்கறதைவிட, வாழை கரும்பிலே அதிகம். வெற்றிலைக் கொடிக்காலிலே நல்ல இலாபம் கிடைக்குதாம். அதுக்கெல்லாம் பாடு அதிகம்—பலனும் அதிகம்—குச்சுக் கிழங்குக்கு, பலன் அதிகம், பாடு அதிகம் தேவையில்லை" என்று. வேலப்பன் விவரித்தபோது, "இதெல்லாம் நமக்கு எதுக்குடா? இம்மாம் காலமா நெல்லுபயிர்பண்ணி பிழைச்சு வந்தமா, கிழங்கு தோண்டிகிட்டுக் கிடந்தமா?' என்று முதியவர்கள் பேசினர்—என்றாலும் அவர்கள்கூட, கொல்லையில் குச்சுக் கிழங்கு பயிர் நிமிர்ந்து நின்றபோது, வேலப்பனைப் புகழ்ந்தார்கள். "பய, கெட்டிக்காரன்தான். பாரேன் பயிரை; மூக்கணாங்கயிறு போடாத காளை முறைச்சிகிட்டு நிற்குமே அதுபோல இருக்கு" என்று கூறினர்.

வேலப்பன், இந்தப் பேச்சை எல்லாம் கேட்டு, மேலும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டான். கொல்லையைச் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம், வேலப்பனுக்குக் கலியாணம் பந்தலே தெரிந்தது.

இவ்விதம் இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தவனுக்குப் பேரிடி விழுந்தது, "மார்க்கட் நிலவரம்'—குச்சிக் கிழங்குக்குக் ‘கிராக்கி' இல்லை, வாங்குவோர் இல்லை என்ற செய்தி அவனைச் செந்தேள்போல் கொட்டிற்று. முதலிலே, இது யாரோ வேண்டுமென்றே பொறாமையாலே கட்டிவிட்டது என்று எண்ணினான்; விவரம் அறிந்துவர நகரம் சென்றுதிரும்பிய பிறகுதான், அவனுக்கு மனமே உடைந்துவிட்டது. அங்கு தெளிவாகவே சொன்னார்கள்; பல கிராமங்களிலே இந்தச் செய்தி தெரிந்து, விவசாயிகள் தலைமேலே கைவைத்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்று கூறினர். குச்சிக்கிழங்கு, உள் நாட்டிலே செலவாகக்கூடிய பண்டம் என்ற எண்ணத்திலே, விவசாயிகள் அதைப் பயிர் செய்யவில்லை; எனவே வெளிநாட்டுக்குக் கிழங்கு தேவையில்லையாம் என்று கூறப்பட்டது கேட்டு மெத்தக் கலங்கிப் போயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/13&oldid=1575583" இலிருந்து மீள்விக்கப்பட்டது