பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 நா. வானமாமலை

மனிதனது எதிர்கால நம்பிக்கை, இச்சமுதாயத்தை மாற்ற நடைபெறும் மாபெரும் புரட்சிப்போராட்டமும், அதில் தனி மனிதன் இணைவதும்தான் என்பதை இவர்கள் மறுப்பதால் சமுதாயம் மறுக்கும் சுதந்திரம், தாங்கள் தேர்ந்தெடுக்கத் தக்கதாக இருக்கிறதென்று கூறுகிறார்கள். இச்சமுதாயத்தை அழித்துப் புதிய உலகை நிறுவ முன்னேற்றும் சக்திகளோடு ஒன்றி நிற்பது சகல மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவதாகும் என்பதை இவர்கள் காண்பதில்லை. முதலாளித்துவ அமைப்பில் முதலாளிக்குச் சுரண்டும் சுதந்திரம் தவிர, வேறெந்தச் சுதந்திரமும் மக்களுக்கு இல்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்.

சாவின் எல்லையில் உலகத்தை நெருக்கமாகக் காணலாம் என்று சொல்லுபவர்கள் ஒன்றையொன்று அழிக்க முயலும் இரு பிரதான வர்க்கங்களின் எல்லைக்கோட்டில் நின்று நெருக்கமாகப் பார்க்க விரும்புகிறார்கள். இப்போராட்டத்தில் மனித சுதந்திரத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். எல்லா மனிதர்களின் சுதந்தரத்திற்காகவும் நடைபெறும் போராட்டத்தில் இவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள். இவர்களுக்கு முதலாளித்துவம் முழு ஆதரவும் அளிக்கிறது.

இப்போக்குகள் ஏகபோக வளர்ச்சி ஏற்பட்டு வரும் நம் நாட்டிலும் பரவுகின்றன. வர்க்க உணர்வையும் புதிய உலகிற்காகப் போராடும் உணர்ச்சியையும் வருங்கால நம்பிக்கையையும் தகர்த்து, உள்ளப் போராட்டத்திலும் சமூகத்திற்கும் தனிமனிதத்துவத்திற்கும் இடையே நடைபெறும் கற்பனையான போராட்டத்திலும் மனிதனைத் தள்ளி ஆழ்த்திவிட இத்தத்துவவாதிகள் முயலுகின்றனர்.

இவை எந்த வடிவங்களில் இலக்கியத்தில் தோன்றுகின்றனஅறிந்து அவற்றை முறியடிக்க முற்போக்கு எழுத்தாளர்கள் முன்வரவேண்டும்.