பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

தொடக்கக் காலம்

புதுக்கவிதை, கவிதையற்ற கவிதை, Verse Libre என்ற பல பெயரிட்டு அழைக்கப்படும் வசன கவிதை என்ற புதுப் போக்கு நம் கவிதையுலகில் தோன்றியுள்ளது. இக்கவிதை மரபினர் தங்கள் கவிதைகளின் உள்ளடக்கமும் உருவமும் மிகப் புதியது, தங்கள் புதிய மரபு பழைமை மரபினும் சிறந்தது என்று கூறுகிறார்கள். ‘எழுத்து’ பத்திரிகையிலும் அதற்கு வெளியிலும் நூற்றுக்கணக்கான புதிய கவிதைகள் தோன்றிய வண்ணமுள்ளன. 1962இல் எழுத்தில் வெளியான கவிதைகள் 200லிருந்து 63 கவிதைகள் நூல் வடிவில் எழுத்துப் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கட்டுரையில் புதுக் கவிதையின் உள்ளடக்கம் என்ன, அது புதுமையானதுதானா, அவற்றில் என்ன புரட்சிதான் அடங்கிக் கிடக்கிறதென்று ஆராய்வோம்—மேலும், இக் கவிதை மேனாடுகளில் 1910 முதல் தோன்றியது எனவும், இதன் சிறந்த பிரதிநிதிகள் டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்டு என்னும் கவிகளென்றும் புதுக்கவிதைகளது தொகுப்பின் முன்னுரையில் சொல்லப்படுகிறது. அவர்கள் கவிதைகள் எச்சமூகச் சூழ்நிலையில் தோன்றியவை, அவர்களின் கவிதைகளின் உள்ளடக் கத்தைத் தமிழ்ப் புதுக்கவிஞர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதையும் காண்போம். புதுக்கவிதைகளின் தொகுப்பிறகுப் புதுக் குரலகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளைத் தொகுத்திருப்பதால் இவை இப்போக்கிற்குச் சிறந்த பிரதிநிதித்துவம் வாய்ந்தவை என்று நான் கருதுகிறேன்.

இந்நூலின் துழைவாயிலில் சி. சு. செல்லப்பா புதுக் கவிதையின் உள்ளடக்கத்தின் தன்மையைப் பற்றி விரிவாக எழுதுகிறார். அவரும், இப்புதுக்கவிஞர் வரிசையைச் சேர்ந்த வர். எனவே அவருடைய கருத்தை, புதுக்கவிதையின் இலக்கியக் கொள்கைக்கு உரைகல்லாகக் கொள்ளலாம். அவர் கூறுவதாவது:

பிராய்டின் கருத்துக்களால் அவர்களது அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும் ஆழமும் பெற்றது.