பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

51

திரத்திற்காகப் போராடுகின்ற மக்கள் அணி வலுத்து வருகிறது. சுரண்டுவோர் கூட்டம் வலிமையிழந்து வருகிறது. மக்கள் இப்போராட்டத்தில் நம்பிக்கையோடு முன்னேறுகிறார்கள். இச்சமூக உண்மையைக் காணமுடியாத புதுக்கவிஞர்கள், இப்போராட்டத்தில் தங்கள் ஸ்தானத்தை நிர்ணயித்துக் கொள்ளாத புதுக்கவிஞர்கள் அகத்துக்குள் ஏதோ போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்களைப் பற்றிக் கவலைப்படாத புதுக்கவிஞர்களைப் பற்றி மக்களும் கவலைப்படவில்லை என்பதை அறிந்து அவர்கள் ஆத்திரம் கொண்டு சபிக்கிறார்கள்.

போராட்டங்களைக் கண்டு வெருளுவதால் தங்கள் அக ஓட்டத்தை இவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அங்கே அவர்கள் காண்பதெல்லாம் இருட்குகையும் மதுமயக்கமும் துழாவுதலும் கணத்தாரையும்தான். தேடித்தேடிப் பார்த்தாலும் மனித கெளரவத்தை உயர்த்துகிற, மனிதனது அறிவை விசாலப்படுத்துகிற, மனித உணர்ச்சியை ஆழப்படுத்துகிற எந்தச் செய்தியையும் இவர்கள் மனிதனுக்குக் கூறவில்லை. சொறிந்து சுகம்காணுகிற சொறி, சிரங்கு நோயாளி, பிறருக்கு அச்சுகம் இல்லையே என்று கர்வம் கொண்டு கூறுவது போல் இருக்கிறது. இவர்களது அகவுலக வெளியீடுகள் எல்லாம்.

இவைகளுக்கெல்லாம் விடை காண ஃபிராய்டிசத்தைத் துணையாகக் கொண்டிருப்பதால், காமவிகாரங்களே மனித வாழ்க்கையின் அடிப்படை உந்துதல் சக்தி என்று நம்பி, அதிலும்கூட ஆரோக்கியத்தோடு ஈடுபடமுடியாமல் தவித்து, மனதில், கற்பனையில், இன்பங்கான முயலும் கிழவனைப் போல மனித நடத்தைக்கெல்லாம் அகப்போராட்டத்தைக் காரணமாகக் காட்டுகிறார்கள். இக்காரணங்களால்தான் அவர்களுடைய கவிதைகள், சோக ஓலங்களாகவும் காவிரிக் கலக்கலின் கழிவுகளாகவும் நகத்தின் அழுக்காகவும் விட்டில் சுவாலையில் எரியும் ‘சொய்’ என்ற சப்தமாகவும் சாவு தன்னை மெல்லும்போது ரசிக்கும் கற்பனை உணர்வாகவும் உருவெடுக்கின்றன.

இவர்களது சோக ஓலங்களும் நம்பிக்கை வறட்சி ஒப்பாரிகளும் சாவுக் காதல் கீதங்களும் வாழ்க்கை மறுப்புப் பாடல்களும், நல்வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடும் மக்களுக்குச் சிறிதும் தேவையற்றவை. இவர்களுடைய புதுக்கவிதைகளில் புதுமையுமில்லை; கவிதைத் தன்மையுமில்லை; புரட்சியுமில்லை. இவை வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயந்து சாவை விரும்பும் பலவீன மனிதர்களது கூக்குரல்தான்.