பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நா. வானமாமலை

இவர்கள் காண மறுக்கிறார்கள். அதனை எதிர்த்துக் கிளர்த்தெழுந்திருக்கும் மனித வர்க்கத்தின் ஒன்றுபட்ட உணர்வையும் போராட்ட ஒற்றுமையையும் கண்டு இவர்கள் நடுங்குகிறார்கள். ஆகையால்தான் மனிதனது துன்பங்களுக்கு விடிவு இவ்வாழ்வில் இல்லை, சாவில்தான் இருக்கிறதென்று கூறுகிறார்கள். எனவே இவர்களுடைய கவிதைகளில், வாழ்வில் சலிப்பையும் சாவில் இனிமையையும் காணும் போக்கை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு மனிதனது மேன்மையை உணராத புதுக் கவிஞர்கள் தனிமனிதம் என்ற கற்பனையில் ஆழ்கிறார்கள்; அதன் சுதந்திரத்திற்காக உள்ளத்துக்குள் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை ‘எனக்குப் பகை நானே’ என்ற கூடார்த்தமான முழக்கங்கள் மூலம் வெளியிடுகிறார்கள். இதற்கு அடிப்படை, மனிதனுடைய உணர்வுநிலைக்கும் ஆழ்மட்ட உணர்வுநிலைக்கும் நடைபெறும் போராட்டம்தான் மனித நடத்தையை நிர்ணயிக்கிறது என்று ஃபிராய்டிசம் சொல்வதில் இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதுதான்.

மனித கெளரவத்தைப் பாதிக்கின்ற அநீதிகளை எதிர்த்து இன்று உலகமெங்கிலும் மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்கள் புற உலகில் நடைபெறுவன. ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் வெள்ளையர்களது இனவெறிக்கு எதிராக நீக்ரோ மக்கள் போராடுகிறார்கள். சின்னஞ்சிறு நாடுகள் முதலாளித்துவ அரசாங்கங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றன. உலகமெங்கும் போரைத் தடுத்துச் சமாதானத்தை நிறுவும் நோக்கத்தோடு உலக மக்கள் போராடுகிறார்கள். தொழிலாளிகள் முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறார்கள். விவசாயிகள் நிலப் பிரபுத்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறார்கள். இப் போராட்டங்கள் அனைத்தும் மனித வர்க்கம் நல்வாழ்வு பெற்றுச் சகோதரர்களாக வாழ்வதற்கு நடைபெறும் போராட்டங்கள். இவையனைத்தும் பெரும்பான்மையோருக்கு வாழும் வாய்ப்பு அளிக்காத முதலாளித்துவச் சுரண்டல் சமுதாயத்தை ஒழித்து, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழும் வாய்ப்பளிக்கக் கூடிய, சுரண்டலற்ற சோசலிசச் சமுதாயத்தை நிறுவ நடைபெறும் பகுதிப் போராட்டங்கள். இக்கிளை நதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பேராற்று வெள்ளமாகப் பெருகினால் சமூக அநீதிகள் அழிந்து, வர்க்கப் பேதங்கள் ஒழிந்து மனிதனுக்கு மனிதன் சமமாகும் வாய்ப்பு ஏற்படும். அது வர்க்கப் போராட்டத்தின் மூலம்தான் சாத்தியமாகும். இந்தப் போராட்டம் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தங்கள் சுதந்-