பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


தற்போது புதுக்கவிதை ஒரு இலக்கிய வடிவமாக உருவெடுத்துள்ளது. ஆயினும் புதுக்கவிதை ‘கவிதைதான்’ என்று ஒரு சாராரும் ‘கவிதையல்ல’ என்று மற்றொரு சாராரும் தொடங்கியிருக்கின்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது வாதத்தில் முடிவு செய்யப்பட முடியாததொன்றாகும். குறிப்பிட்டதொரு வடிவம் காலத்தினால் அங்கீகரிக்கப் பட்டால்தான் அது அந்தக் குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாக இருக்க முடியும்.

ஆனாலும், புதுக்கவிதை ஓர் இயக்கமாக உருவாகி இன்றைய இளைய தலைமுறையினரின் உணர்வு வெளிப்பாட்டு வடிவமாக அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது தோன்றுகின்ற புதுக்கவிதைகளின் கவித்துவம் குறித்துப் பலரும் எழுப்புகின்ற ஐயத்தில் இருக்கின்ற நியாயத்தைப் புரிந்துகொள்கின்ற நாம், அதே புதுக்கவிதைகள் கையாளுகின்ற கருப்பொருள்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுக்கவிதையின் சாதனை என்ன, அதன் போக்குகள் எந்தெந்த வழிகளில் வாய்க்கால் அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பதைப் பகுத்தாராயும் நூல்கள் தமிழில் இதுவரை வரவில்லை. அந்த வழியில் இது முதல் நூல் என்று பெருமை கொள்ளலாம்.

‘ஆராய்ச்சி’ ஆசிரியரும் ஆய்வுப் பேரறிஞருமான பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும் ஆராய்ச்சி உணர்வுக்கு அடித்தளமிட்ட பெருமைக் குரியவர். ஆய்வு முறையில் புதிய அணுகுமுறைகளை உருவாக்கியவர்.

அவர் புதுக்கவிதையின் இரண்டு வகைப் போக்குகளையும் ஆய்ந்து தமக்கே உரிய பார்வையில் பகுத்து எழுதியுள்ள இந்நூல் ‘புதுக்கவிதை’க்குப் புது விளக்காக அமைந்து வழிகாட்டுமென நம்புகின்றோம்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள முதலிரண்டு கட்டுரைகளும் ‘தாமரை’யில் வெளியானவை. ஐந்தாவது கட்டுரை ‘ஆராய்ச்சி’யில் வெளியிடப்பட்டது. ஏனைய கட்டுரைகள் இந்த நூலுக்காக எழுதப்பட்டன.

மே. து. ராசு குமார்