பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்றாம் அச்சுக்கான பதிப்புரை

ஆய்வுப்பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுடைய புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் என்ற இந்த நூலின் முதல் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டவுடனே விற்று விட்டன. இருப்பினும் இந்த மூன்றாவது அச்சு வெளிவர 21 ஆண்டுகள் இடைவெளி என்பது மிகுதிதான். நாவா அவர்களின் படைப்புகளைத் தொகுப்பு நூல்களாகக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.

பொதுவான இலக்கியப் படைப்புகளின் அடிப்படைகளை விரிவாக வெளிப்படுத்தி, அதன் பின்னணியில் புதுக்கவிதைகளின் தன்மைகளை இந்நூலில் நாவா ஆராய்கிறார். முதல் பதிப்புக்கும் இரண்டாம் பதிப்புக்குமிடையிலான மூன்று ஆண்டுகளில் புதுக்கவிதையில் ஏற்பட்ட மாற்றங்களை நுணுக்கமாகக் கண்டு ‘முன்னுரை’ யில் குறிப்பிட்டதுடன், அடுத்து இதன் போக்குகளை மதிப்பிடவும் எண்ணியிருந்தார். ஆனால், அந்த வாய்ப்புக் கிடைக்காமல்போய்விட்டது.

பலவகைப்பட்ட பயிலுமுறைகளுக்குட்பட்ட பின், இன்று புதுக்கவிதை ஓர் இலக்கிய வடிவமாக உருவாகியுள்ளது. மரபுக் கவிதைகள் என்ற யாப்பிலக்கண வரம்புகளுக்கடங்கிய பழைய வடிவங்கள் பெரும்பாலும் இப்பொழுது எழுதப்படுவதில்லை. விரைவும் மாறுதல்களும் கொண்ட இன்றைய கால கட்டத்தைய மனித உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தக்கூடிய ஒர் இலக்கிய வடிவம் தோன்றுவதென் பது இயற்கையானதே. அதேபோன்று, பாட்டு வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் வேறுபட்ட நாவல், சிறுகதை என உரைநடை இலக்கிய வகைகள் தோன்றியதைப் போன்று, பாட்டு அமைப்பிலும் வளர்ச்சி ஏற்படுவதைக் காலம் கட்டாயமாக்கியது.

ஆனால், இது எப்படியிருக்கவேண்டும் என்பதிலான தொடக்கக் காலக் குழப்பங்கள், பல ஐயங்களைத் தோற்றுவித்தன. பாட்டின் புதிய வளர்ச்சி என்பதற்கு மாறாக, உரை நடையின் வேறு வடிவம் எனத்தக்க வகையில் பல முயற்சிகள் —முளைகள் வெளிப்பட்டன. வரி பிரித்து எழுதுவதன்றி, உரை நடையினின்றும் பிரித்து இனங்காணக்கூடியவாறான தனித் தன்மைகள் எதுவும் காணப்படாத வகையில், இந்த முனைப்பு-