பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பதிப்புரை

களின் முதல் கவிஞர்கள் சிலரது படைப்புகள் அமைந்தன. பழைமை அழிப்பு என்ற புதிய விரைவில், மரபு மறுப்பு என்ற நெடிய நோக்கில், கவிதை வெறுப்பு என்ற கடிய போக்கில் சென்று இவர்கள் நின்றார்கள்.

இந்நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் அழுத்தமாகவும் கூறியிருப்பதைப் போன்று வேறுபாடான கொள்கைகளைக் கொண்டவர்கள் தங்கள் உளப்பாங்குக்கேற்றவாறு உள்ளடக்கத்தை முன்னிறுத்துகிறார்கள். உத்தியும் வெளிப்பாட்டு முறையும் அவரவர்களது இயல்புகளுக்கேற்ப இயைந்துவருகின்றன. இதில் ஒருமைப்பாட்டைக் காண்பதென்பது இயலாதுதான், ஆனால், தொடக்க கால முயற்சிகளைக்கொண்டு, கற்பனை வறட்சியும் கொள்கைக் குழப்பங்களும் சிந்தனைத் தொடர்புமற்றதாகப் புதுக்கவிதை தனிவழியமைத்துக் கொள்ளுமோ என்ற எண்ணமும், இப்படியெழுதுவதுதான் புதுமை என்ற போக்கு இயற்கையான கவிஞர்களையும் ஒட்டிக் கொண்டு, அவர்களும் அவ்வழியிலேயே அடியொற்றிச் சென்று விடுவார்களோ என்ற அச்சமும் நேர்ந்தபோது, களமும் தளமும் வளமும் கொண்ட புலமையாளர்கள் புதுக்கவிதைக்குப் புத்துயிர் தந்தார்கள். ஆக்கப் படைப்புகளுக்கும் புதுக்கவிதையைப் பயன்படுத்த முடியும் என்று காட்டினார்கள். பேரா. நாவா அவர்கள் முன்னுரை எழுதிய 1978ஆம் ஆண்டிலேயே முகிழ்ந்துவிட்ட இந்த முன்னேற்றம் இன்று முழுமை பெற்று வருகிறது என்றே கூற வேண்டும்.

அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்று தனித்தும், பின் பாவினங்களாகப் பல்கியும் காலத்துக்கேற்ற வடிவங்களைப் பெற்ற செய்யுள்—பாட்டு—கவிதை இன்று புதுக்கவிதையாக மலர்ந்துள்ளது. உரைநடையினின்றும் பிரிதான பாடலின் தனித்தன்மைகள் வாய்ந்த சிறப்புக் கூறுகள் கொண்டதாகவும் இது அமைந்திருக்கிறது. எந்த எழுத்தும் அழகியல் தன்மைகளைப் புறக்கணிக்காமல், கற்பனை வளத்தில் கரைந்து போகாமல், சொல்லவந்த பொருளை மறைக்காமல் மனத்தை—கருத்தை ஈர்க்கும்போதுதான் இலக்கியமாகின்றது.

இந்த வகையில் புதுக்கவிதை செழுமை பெற்று, செம்மையுற்று மேலும் வளரும்—வளம் பெறும் என்ற பேரா. நாவா அவர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறி வருகிறது என்றே கொள்ளலாம்.

06-10-1999

மே.து.ரா.