பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் என்னும் நூலின் இரண்டாவது பதிப்பை இப்பொழுது மக்கள் வெளியீடு வெளிக்கொண்டு வருகிறது. இப்பதிப்புக்கெனப் ‘புதுக்கவிதை—பழமையும் புதுமையும்’ என்ற புதிய கட்டுரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.

1975இல் நூல் வெளிவந்த பிறகு புதுக்கவிதைப் போக்குகளில் சில முக்கிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. அவற்றை நான் உணருகிறேன். ஆனால் புதுக்கவிதைத் தொகுப்புகள் பலவற்றையும் பத்திரிகைகளில் வெளிவந்த பிற கவிதைகளையும் உடனடியாகத் தொகுத்து விரிவான மதிப்பீடு செய்து இந்நூலில் சேர்க்க எனக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை.

ஒரு கவிதையை ஒரு முறை படித்தவுடனே அதனைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் அதிமேதாவி நானல்ல. ஒரு கவிஞனது கவிதையைப் பலமுறை ஆழ்ந்து படித்த பின்னரே, முன்னர் அவன் எழுதிய கவிதைகளோடு ஒப்பிட்டு, அவனது இலக்கியப் போக்கை வகைப்படுத்த நான் முயலுவேன். நான் அவசர விமர்சனங்கள் எழுதுகிறவனல்ல. ஆழ்ந்த இலக்கிய ஆய்வின் முடிவுகளையே நான் வெளியிட விரும்புகிறேன். பொதுவாக இன்றைய புதுக்கவிதைகளில்,

1)
புதிர்கள் குறைந்துள்ளன.
2)
இரு வர்க்கங்களின் கருத்து மோதல்களிடையே நசுங்கி ஒமிடும் ‘நடுநிலைக்கவிஞ’னது ஓலங்கள் மிகக் குறைவாகவே கேட்கின்றன.
3)
சமூக விமர்சனங்கள், பிரச்சினைகளுக்கு விடை தேடும் முயற்சிகளாக உருமாறியுள்ளன.
4)
மனிதநேசம், உலக முன்னேற்றத்தில் நம்பிக்கை, உலக மக்களின் நல்வாழ்வில் நம்பிக்கை ஆகியன அதிகமாகியுள்ளன. இக்குறிக்கோள்களுக்காகப் போராடுகிற மக்களின் போர்ப்பரணியாகக் கவிதை ஒலிக்கவேண்டும் என்ற நன்னோக்குத் தோன்றி வளருகின்ற போக்காக உள்ளது.