பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

59

அதற்கெல்லாம்
முன்னோடியாகத்தான்
இதோ
எங்கள் முதலாளித்துவத்திற்கு
தாங்கள் ஜனநாயகம் என்று
பெயரிட்டிருக்கிறோம்.

இவை முதலாளித்துவத்தின்மீது தாக்குதல்கள். அதன் போலி வேஷங்களைக் களைத்தெறியும் அங்கதங்கள். ஜோடனையை நீக்கி எலும்புக் கூட்டைச் சுட்டிக்காட்டும் துகிலுரிப்புகள்.

சில சமயங்களில், இது சர்வாம்ச நம்பிக்கையின்மையாகவும் நிராசையாகவும் வெளிப்படுவதும் உண்டு. உதாரணமாக சிற்பியின் 'எங்களுக்குப் பெயர் வைக்க தெரியாது' என்ற கவிதை ஏறக்குறைய Scepticism என்ற எல்லைக்குச் சென்று விடுகிறது:

நியாயங்களின் சமாதிகளை
நீங்கள் கண்டதுண்டா?
எங்கள் நாட்டில் அவைகளை
‘நீதிமன்றங்கள்’ என்போம்!
பொய்மைக்கு
பொன் மெருகு பூசும்
சொல் வித்தைக்காரரை
நீங்கள் பார்த்ததுண்டா?
அவர்களை நாங்கள்
‘அரசியல்வாதிகள்’ என்போம்!
நச்சுப்பாம்பை
‘நல்ல பாம்பு’ என்போம்!
கள்ளிச் செடியை
‘கற்பக விருட்சம்’ என்போம்!
எங்களுக்குப்
பெயர் வைக்கத் தெரியாது!

சமுதாய விமர்சனத்திற்குமேல், புறநிலைச் சமுதாய இயக்கநிலைகளை முழுதும் உணர்ந்து விமர்சனத்திலிருந்து புரட்சி மாற்றத்தில் நம்பிக்கையூட்டும் பாடல்களும், சமுதாயப் பிரக்ஞையில் உயர்ந்து நிற்பவர்களிடமிருந்து தோன்றுகின்றன. இந்திய ஏகபோக முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தோடு அழிந்துபோகும் என்ற வருங்கால நிகழ்ச்சியைச் சமூக