பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நா. வானமாமலை

 இயல் விதிகளின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ‘அறிவன்’ இவ்வாறு கூறுகிறார்:

அம்மா அடி அம்மா
தங்க முலாம் பூசிய
மேனி யழகை மோகித்த
அந்திய மூலதனங்கள்
மிதியாடக் கொடுத்து விட்டாய்—
உன்னை
விதவையாகக்கூட வாழ்ந்திருக்கலாம்
நீயோ
வேசியாக...
அடி அம்மா!
நீ மறுத்தாலும்
உன் ஏகாதிபத்தியக் காதலனொடு
உடன்கட்டை ஏற...
இங்கே
ஒரு தீக்குண்டம் தயாராகிறது.

போராட்டச் சக்திகளின் வெற்றியில் வரலாற்று ரீதியாக, சமூகவியல்வாதிகளின் போக்கில் நம்பிக்கையுடன் எழுந்த பாடல்களில் சிலவற்றிற்கு உதாரணம் கண்டோம்.

இவ்வாறல்லாமல், இளமையின் கோபத்தாலும் அவசர உணர்ச்சியாலும், இயங்கு சக்திகளின் தராதர பலத்தையும் சமுதாயத்தை மாற்றுகிற சக்திகளின் பக்குவநிலையையும் உணராமலும், சக்திகளின் இனம் உணராமலும் வலிமை உணராமலும் எழுகின்ற உணர்ச்சி வெளியீடான பாடல்கள் தற்காலத்தில் மிகுதியாக எழுகின்றன. இப்பாடகர்கள் துடிப்பு மிக்கவர்கள். ஆனால் வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் தத்துவப் பார்வையும் இயக்கவியல் அறிவும் இல்லாதவர்கள். இவர்களுடைய உணர்ச்சியும் சிந்தனையும், போராட்டச் சக்திகளின் இயக்கக் கதியை மிஞ்சி இவர்களைத் தனிமைப்படுத்துவதோடு இவர்களையும், போராட்டச் சக்திகள் மீது நம்பிக்கையிழக்கச் செய்கின்றன. இத்தகைய இளமைத் துடிப்பும் புரட்சி ஆவேசமும் தோன்றுகிற சில கவிதைகளைக் காண்போம். இக்கவிதைகளில் முற்றிலும் பழமையையும் வரலாற்றுச் சாதனைகளையும் மறுக்கும் போக்குகளும் உண்டு. ஆயினும் இவை உடைமை ஆதிக்கத்தை எதிர்க்கும் உள்ளடக்கம் உடையவை. எதிர்க்கிற சக்திகளோடு இணைந்து அவற்றை வளர்க்கப் பாடாமல், தனியான சிலரது தர்மாவேச உணர்ச்சிப் பெருக்காக வெளியாகி விடுகிறது. இதற்குச் சில உதாரணங்கள் தருவோம்: