பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதிய போக்கு

மீராவின் கனவுகள்

கனவுகள் உள் ஆழத்தின் உறக்கத்தில் எழுந்து நனவில் முகிழ்பவை. கற்பனைகள் நனவிலேயே தோன்றிப் பறப்பவை. ஆயினும் இவையிரண்டிற்கும் கட்புலனாகாத வேர்கள் சமுதாய உறவுகளே. அவற்றின் தடைகளினால் உள்ளத்தில் வளரும் கனவும் கற்பனையும் சிறைப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் இன்பமாக மாறிவிடாமல் வறண்டு போகின்றன. வறட்சியைத்தான் மீரா காகிதமாக்கிவிட்டார்போலும்.

தற்காலப் பண உறவுச் சமுதாயத்தில் வாழ்க்கையின் மதிப்புகளுக்கு அடிப்படையே பணம்தான். அமெரிக்காவில் 5,000 டாலர் யோசனை, 1000 டாலர் அழகு, 10,000 டாலர் பரிசுக்குரிய புத்தகம், 2,000 டாலர் மதிப்புடைய வெண்கலச் சிலை, 20,000 டாலர் வருமானம் தரக்கூடிய அறிவியல் திட்டம் (Project) என்று கலை முயற்சிகளுக்கும் அறிவியல் முயற்சிகளுக்கும் கலைப் பொருள்களுக்கும் டாலரில்தான் மதிப்பு வைக்கிறார்கள். ஸ்டாலினது மகள் ஸ்வெட்லானாவின் புரளிக் கதைகளை 7 லட்சம் டாலர் விலைகொடுத்து வாங்கி, அவளது சுயசரிதையாக வெளியிட்டன, அமெரிக்கப் பொய் விலைப் பத்திரிகைகள். பொய்க்குக்கூட விலையுண்டு முதலாளித்துவ உலகின் தலைநகரில்.

மனித உணர்வுகளில் மிகவும் நுண்மையும் அழகும் வாய்ந்தவை இளமைக் காலக் கனவுகளும் கற்பனைகளும். இவை அழகிய மொட்டுக்கள். மலர்வதற்குரிய தோட்டமின்றி அவை வாடிவிடுகின்றன. தோட்டத்தின் சொந்தக்காரன் பண மதிப்பையேயன்றி அழகைக் காண முடியாத குருடன். இவ்வுணர்வுகளைக் கவிஞர்களும் கலைஞர்களும் போற்றினாலும், வாடிவிடும் இதனைப் பார்த்துச் சோக உணர்வும் கொண்டனர். பண மதிப்புச் சமுதாயத்தில், திருமண உணர்வும் ஒரு பண உறவே. இதனை நான் விளக்கவேண்டியதில்லை.

எனினும் பண மதிப்பே, வாழ்க்கையின் அடிப்படை மதிப்பாக இருக்கும் ஒரு சமுதாயத்தின் திருமணக் கருத்தையும், மனித உணர்வு மதிப்பையே (human value) வாழ்க்கையின்