பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நா. வானமாமலை

அடிப்படை மதிப்பாகக் கருதும் மனித மதிப்புச் சமுதாயத்தின் திருமணக் கருத்தையும் ஒரே ஒரு அனுபவத்தின் மூலம் குறிப்பிட்டுக் காட்டலாம் என எண்ணுகிறேன்.

என்னோடு ஒரு முதிய இந்திய எழுத்தாளர் மாஸ்கோவிற்கு வந்தார். அவர் இளமை முழுவதையும் ஆயுதப் புரட்சி இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகச் சிறையில் கழித்தவர். 44 வயதில் திருமணம் செய்துகொண்டார். தமது இந்தி இலக்கிய அறிவைப் பயன்படுத்தி நன்றாகச் சம்பாதித்தார். டெல்லியில் வீடு கட்டினார். பையனை இங்கிலாந்தில் வாணிபக் கணக்கியல் கற்க அனுப்பினார். சொந்தக் கார் வாங்கினார். அவருக்கு ஐந்து பெண்கள் உள்ளனர். திருமணமாக வேண்டும். அவருடைய வாழ்க்கைப் பிரச்சினை அது. அவர்களுள் இருவருக்குக் கல்லூரிக் காதல் ஏற்பட்டு அக்காதலர்களையே மணந்துகொள்ள விரும்புகிறார்கள். கல்லூரிக் காதலாயினும் சரி, கட்டி வைக்கப்படும் கணவனாயினும் சரி, அவருடைய சாதியில் வரதட்சணையின்றிக் கலியாணம் செய்துகொள்ள மாட்டார்களாம். இவருடைய வசதிகளைப் பார்த்து அதிக வரதட்சணை கேட்கிறார்களாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் 20,000 ரூபாய் கலியாணத்திற்காக வேண்டுமாம். அப்படிச் செலவழித்துவிட்டால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஒரே மகனுக்கும் வீடு மட்டும்தான் மிஞ்சுமாம். அது 2 லட்சம்தான் பெறுமாம். என்ன செய்வது என்று இவர் கவலைப்படுகிறார். இந்தக் கவலையோடுதான் மாஸ்கோவில் இளம் பெண்களைப் பார்த்து அவர்களுடைய பெற்றோர்களுக்காகக் கவலைப்பட்டார். ஒரு நாள் எங்களுடைய ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் செர்கேயிடம் அவர் கேட்டார்: “உங்களுக்குச் சகோதரிகள் உண்டா?”

“உண்டு. ஐந்து தங்கைகள்.”

“ஐயோ பாவம்” என்று தனது அனுதாபத்தை அவருக்குத் தெரிவித்துக்கொண்டார். மொழிபெயர்ப்பாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் தனக்கு அனுதாபம் தெரிவித்ததற்குக் காரணம் கேட்டார்.

“இந்த ஐந்து பெண்களையும் மணம் செய்விக்க உங்கள் பெற்றோர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று நினைத்துத் தான் நான் அனுதாபம் தெரிவித்தேன்” என்றார்.

“கலியாணம் என்றால் பணம் எதற்கு?” என்றார் மொழி பெயர்ப்பாளர், அப்பாவித்தனமாக.

“பின்னே மணமகனுக்கு வரதட்சணை, கலியாணச் செலவு, நகைகள், விருத்து.”