பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

9




1. மதமும் வதமும்

மதம் என்றால், திமிர் பிடித்த, கொழுப்பேறிய மதப்பித்து என்றுதான் எல்லோரும் நினைக்கின்றார்கள். நடக்கின்றார்கள்.

தன் மதமே இன் மதம். அடுத்தவர் மதம் புண் மதம் என்று பேசி, ஏசி புழுதி வீசி பேயாட்டம் ஆடுகின்ற பேயர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இதமாக இதயத்தை வருடும் ஒரு சுகத்திற்கு மதம் என்று பெயர். பதம் என்று பெயர்.

மதம் என்றால் சம்மதம் என்று அர்த்தம். சந்தோஷம் என்று அர்த்தம். ஆனந்தம் தரும் அறிவு என்று அர்த்தம். கவர்ச்சி பொதிந்த கருத்து என்று அர்த்தம். சோதனைகளை விரட்டும் சுகம் தரும் போதனை, வாழ்க்கையை வாழ்விக்கும் வளமான கருத்தூற்று. நுண்ணிய நோக்கம். இதமான இலட்சியம். என்றெல்லாம் அர்த்தங்கள். அநேகமல்ல, ஆயிரமாயிரம் உண்டு.

அப்படிப்பட்ட இதமான மதத்தைத்தான் அதம் செய்கிறார்கள். வதம் செய்கிறார்கள். பண வரவிற்காக.

சாதாரண மக்கள் செய்தால்தான் இது சண்டாளத் தனம். சாமியார்களாகி விட்டவர்கள் செய்தால் அது சாத்தான் தனம். சாமிகளை ஆட்டிப் படைக்கிற சைத்தான்களின் காலமாக நம் நாடு மாறிக் கொண்டே வருகிறது. இதை நாம் மாற்ற முயல்வோமே!