பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அந்த ஆசையை அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் முனிவர்கள் ஆனவர்கள் அந்தக் காலத்தில் மனதில் எந்தவித ஆசையும் இல்லாத நிலையை மனதில் உண்டாக்க நினைத்தனர். அதற்கு ‘நிர்வாணம்’ என்று பெயர் வைத்தனர்.

நிர்வாணம் என்பதற்கு ஆசையற்ற மனம் என்ற அர்த்தம் மாறி, ஆடையற்ற உடல் என்று அர்த்தம் கற்பித்துக் கொண்டனர் மக்கள்.

வாணம் என்றால் தீ என்று அர்த்தம். மனித உடலில் மூன்று வகைத் தீ உண்டு. உதிரத்தீ, விந்துத்தீ, சினத் தீ என்று மூன்று உண்டு. இது மூன்றும் மும்மலமாகும்.

இந்தத் தீயை அணைத்து, தேகத்தை தணிய வைத்து, பணிய வைத்து, பண்படுத்திய மேன்மையாளர்களை ‘நிர்வாணி’ என்றனர்.

தீயை அணைக்கும் திறமை பெற்றவர்களை ஆடை உடுத்தாத பக்கிரிகள் என்று ஏசத்தான் மக்களுக்குத் தெரிந்தது. அதன் மகத்துவம் புரியவில்லை. ஆசைகள் தான் ஆடை கட்டிக் கொண்டு அலங்காரம் பண்ணிக் கொண்டு திரிகின்றன. அதனால்தான் நிர்வாணிகள் ஆசையை மட்டும் ஒதுக்கவில்லை. ஆடையையும் அகற்றிவிட்டு ஆனந்தமாக வாழ்ந்தார்கள் போலும்.


79. அம்மணி

நம் வீட்டிற்குத் தெரிந்தவர்கள் வந்தால் அவர்கள் உறவினர்கள். புதியவர்கள் வந்தால் விருந்தினர்கள் வேண்டியவர்கள்.