பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆகவே, சிந்தை தெளிந்தவர், நமது தேகத்தை பொய்யென்றா சொல்வார்கள்? காயம் என்றால் புண் என்று மட்டும் அர்த்தமல்ல. காயம் என்றால் இயற்கை, ஆகாயம், என்று கூட அர்த்தங்கள் உண்டு.

சித்தர் கூறிய நமது தேகம், இயற்கையை போல ஆகாயம் போல இருக்கிறது என்றால், இயற்கையும் ஆகாயமும் எப்படி இருக்கும்? அழகாக இருக்கும். வண்ண வண்ணக் கோலத்தைப் படைக்கிற, பார்க்க பார்க்க கவர்ச்சி மிகுந்த சித்திரத்தை போல இருக்கும். அழகைப் படைக்கிற இயற்கைத் தன்மை, இந்த இரண்டிற்கும் உண்டல்லவா? ஆகவே தேகமானது சித்திரம் போல, அழகானது, அற்புதமானது, கவர்ச்சியானது, காண்பாரை மயக்குவது என்று குறிக்கவே, அந்தச் சித்தர், காயமே இது பொய்யடா என்றார். பொய் என்றால் வஞ்சம், கள்ளம், மாயை என்பது மட்டும் பொருளல்ல. சித்திரம், சாதனை என்று கூட அர்த்தம் உண்டு.

இப்பொழுது அந்த வரிசையைப் படியுங்கள். காயமே இது பொய்யடா. தேகமே இது சித்திரம் போன்றதடா. அந்த சித்திரத்தைப் படைக்கிற காற்று இருக்கிறதே, அது தேகத்தை படைக்கிற அழகடா. ஆமாம் பை என்றால் அழகு என்று அர்த்தம்.

நமது மனித தேகம் ஒரு சித்திரம் போன்று அழகானது. அந்த சித்திரத்தை பத்திரமாகப் பாதுகாத்து, பெருமை கொள்ளாமல், பயனை அடையாமல், அதை அறிவில்லாமல் அழித்து, அநியாயமாக இழைத்து அவதிப்படுகின்றார்களே! இந்த மக்கள்!