பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் மதிப்பீட்டையும், அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் வழங்குவதைத் தவிர்க்க முயன்றே வந்துள்ளனர் என்பதை அவர்களது எழுத்துக்களே நமக்குப் புலப்படுத்துகின்றன. அது மட்டும் அல்ல. புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்று முத்திரை குத்தும் முயற்சியையும் இவர்களில் சிலர் . மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இந்த முயற்சிகள் புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின்னரே அதிகமாயின. 1934இல் காரைக்குடி இராய. சொக்கலிங்கம் நடத்திவந்த 'ஊழியன்' வாரப் பத்திரிகையில் உதவியாசிரியராகப் புதுமைப்பித்தன் பணியாற்றி வந்த காலத்தில், அதில் தமது சொந்தக் கதைகள் சிலவற்றை எழுதியதோடு, வாராவாரம் பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, 'புதுமைப்பித்தன்' என்ற பெயரில் எழுதாமல், நந்தன், சொ.வி. முதலிய வேறு பெயர்களில் பிரபலமான பிரஞ்சுக் கதாசிரியர் மாப்பஸானின் சிறுகதைகள் சிலவற்றை, அவற்றின் தலைப்புக்களைக் கூட அவர் மாற்றாமல், அப்படியே தழுவி . எழுதி அவற்றை ஊழியனில் வெளியிட்டிருந்தார். புதுமைப்பித்தன் உயிரோடு இருந்த காலத்தில் அவர் தேர்வு செய்து கொடுத்திருந்த அவரது எந்தவொரு சிறுகதைத் தொகுதியிலும் இந்தக் கதைகள் இடம் பெறவேயில்லை. புதுமைப்பித்தனின் மறைவுக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அவரது படைப்புக்களைத் தொகுத்து முறையாக வெளியிடத் தொடங்கிய சென்னை ஸ்டார் பிரசுரம் 1953 இறுதியில் 'புதிய ஒளி' என்ற கதைத் தொகுதியில் இத்தகைய கதைகளையும், சேர்த்து அவர் பெயரால் தவறுதலாக வெளியிட்டுவிட்டது. இவ்வாறு அத்தொகுதியில் இடம் பெற்றுவிட்ட மாப்பஸான் கதைகளின் தழுவல்கள் சிலவற்றை, கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னர் 1979இல் இனம் கண்டறிந்த காரைக்கால் கிருஷ்ணமூர்த்தி என்பவர், இதனைக் கொண்டே புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்று முத்திரை குத்த முயன்றார். (இந்தத் தழுவல் கதைகள் பற்றிய விவரங்களையும், உண்மை நிலைகளையும் இந்நூலில் பின்னர் பார்ப்போம்.) இவ்வாறு கிருஷ்ண மூர்த்தி எழுதியதை ஆதாரமாகக் கொண்டு, புதுமைப்பித்தனோடு சேர்ந்து மணிக்கொடிப் பத்திரிகையில் எழுதி வந்தவர்களில் ஒருவரான 'சிட்டி' என்ற பெ.கோ.சுந்தரராஜனும் புதுமைப்பித்தன் மீது இதே முத்திரையைக் குத்த அரும்பாடு பட்டார். இவ்வாறு புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கிய கர்த்தா என்ற முத்திரையைக் குத்தும் முயற்சியை நியாயப்படுத்துவதற்காக,