உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நானே கொன்றேன்!'


க்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது. அவர் தொழில் - அதுவும் பொழுதுபோக்காகத்தான் - கதை, நாவல்கள் எழுதுவது. எந்தப் பழைய நைந்த விஷயத்தையும் ரஸமாகவும் மனதைக் கவரும்படியாகவும் ஒரு புதிய தோரணையில் தான் எழுதுவார். அதிலே இவருக்கு நல்ல பெயர். ஏன்? புகழும் உண்டு. ஆள் பார்வைக்குக் கம்பீரமான, மனதை அப்படியே தன்னுள் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த தோற்றம். நாற்பது வயதிருக்கும் கபோலத்தில் சிறு நரை இருந்தாலும் ஆள் பார்வையில் 'ஒரு கம்பீரம், சிறிது மமதை, இவை எல்லாம் தோன்றும். உலகத்தின் கோழைத்தனம், சிறுமைக்குணம் எல்லாம் இவர் முன் நிற்கக் கூசும். எப்பொழுதும் ஒரு சிரிப்பு - விதியின் அற்ப விளையாட்டுக்களையும் உலகத்தின் அசட்டுத்தனத்தையும் துச்சமாக நினைப்பது போல் ஒரு புன்சிரிப்பு.

இவருக்கு ஒரு இளைய சகோதரன் உண்டு - பெயர் மகரபூஷணம். இருவரைப் போலும் இரண்டு விதமான தனிக்குணம் படைத்த ரத்தக் கலப்புள்ள, ஒரே மரத்தின் இரட்டைக் கிளைகள் போன்ற, இருவரைக் காண முடியாது. அண்ணன் உலகத்தில் வெறுப்பைக் கேவலத்தைப் பார்த்து நகையாடும் தனிச் சிறப்புடையவர். தம்பி உலகத்திலே காதலும், கனவுகளும் கண்டு களிக்கும் இலக்ஷியவாதி. படங்கள் வரைவதில், இவரது கனவுகளைத் திரைச்சீலையில் உருவாக்குவதில் பெரிய மோகம். இப்பொழுது இருக்கும், படம் எழுதும் வாத்தியார்ப் பாடத்தை, ஓவியம் என்று சொல்லிக்கொண்டு வரும் சித்திரக்காரர்களைப் போலல்ல இவருடைய படம். இம்மாதிரியாக தனிப்பட்ட எதிர் எதிரான குணங்கள் படைத்த இரு சகோதரரிடையே இருந்த பாசம், மனித உலகத்தில் காணப்படாதது. அது வெறும் சமாச்சாரமாக மட்டுமல்லாமல் ஒரு பெரும் கதையாக ஒரு இலக்ஷியமாக ஜனங்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.

மகரபூஷணம் இறந்த பிறகு லக்ஷ்மிகாந்தம் சமூகத்திலிருந்தே மறைந்துவிட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு எங்குச் சென்றார் என்ன செய்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது.


174

'நானே கொன்றேன்!'