உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தை எவ்வாறு தீய்த்தது என்று யாருக்குத் தெரியும்? நான் மனிதன், கண்டவிடத்தில் எனது உள்ளத்தின் கொதிப்பைத் திறந்து காண்பிக்க முடியும்? அதிலும் லக்ஷ்மியிடம்? மனிதனும் குரங்கு தான். எதை எடுத்தாலும் பிய்த்து முகரத்தான் தெரியும்.

அவள் எனது இலட்சியம். வேறு ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு அவனைக் காதலித்திருப்பவளைக் காதலிக்க எனக்கு உரிமையுண்டா? உணர்ச்சி, உரிமையைத்தான் கவனிக்கிற தாக்கும்! நட்சத்திரம் வேண்டுமென்று அழுகிற குழந்தைக்கு எதைக் கொடுத்து ஆற்ற முடியும்?

எனது காதல் பாபம். எனக்கும் தெரியத்தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான பாபங்கள் எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம், செய்யவேண்டும்! பாபந்தான் மனிதனது உடலைப் புனிதமாக்குகிறது.

மனிதன்... அவனைப் போல் அசட்டுத்தனமான பிரகிருதிகள் கிடையா. மனிதன் புழு!

அவளுக்கு என் உள்ளத்து எரிமலையின் கொந்தளிப்புத் தெரியாது.

கோபாலபுர மோகத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற பைத்தியம் பிடித்தது. கோபாலபுரத்தில் வாழ்க்கையைச் சித்தரிப்பது இலக்கியத்தின் வெற்றி என்று நினைத்தேன். படமும் படிப்படியாக வளர ஆரம்பித்தது. அதில் லக்ஷ்மியும் இடம்பெற்றது அதிசயமன்று. சன்னலிலிருந்து பார்க்கும்பொழுது லக்ஷ்மியின் களங்கமற்ற சிரிப்பு எனது நாவலின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.

அன்று தீபாவளிக்கு முதல் நாள். அவளுடைய புருஷனும் பட்டணத்திலிருந்து வந்திருந்தான். பண்ணையார் வீட்டில் ஏகத் தடபுடல் என்று நான் சொல்ல வேண்டுமா? மறுநாள் இந்தப் புழுக்களின் தன்மையைக் காண்பிக்கும் நாள் என்று யார் கண்டார்கள்?

மத்தியானம் நான் அவர்கள் வீட்டிற்குள் போனேன். வாசற்படியில் ஏறினதும் எனக்கு என்னமோ ஒரு மாதிரியாக இருந்தது. எல்லோரும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். பண்ணையார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எதிரில் ஒரு ஷோபாவில் லக்ஷ்மியும் அவள் கணவனும் உட்கார்ந்திருந்தார்கள். மூவருக்கும் எதிரில் அவள் தம்பி சுந்து, பெரிய மனிதன்போல் உட்கார்ந்திருந்தான். லக்ஷ்மியின் முகம் குன்றிப்போய் வெளிறியிருந்தது. அவள் கணவன் சித்திரப்பதுமை மாதிரி திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான். "அம்பி அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தான். உமது மேஜையில் இருந்ததாம். அதை எழுதியது நீர்தானா பாரும்!" என்றார் பண்ணையார். எனது மனம் களங்கமற்றிருந்தால்தானே! கடிதம் நான் தான் எழுதினது. ஆனால் அது எனது நாவலின் ஒரு பகுதி. அப்படிச் சொன்னால் நம்புவார்களா? அவள் பெயரும் லக்ஷ்மி. நானும் என்னால் இயன்றவரை சொன்னேன். மனம் களங்கமாக இருக்கும் பொழுது என்னதான் சொல்ல முடியும்? எனக்குச் சுந்துவின் மீது கோபம் வந்தது. ஆனால் பண்ணையாருக்கும் அவருடைய

258

கோபாலபுரம்