உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாப்பிள்ளைக்கும் லக்ஷ்மியின் மீது சந்தேகம். என் முன்பே நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். கண்கள் எரிக்குமானால் அவள் என்னை அன்று தீய்த்துவிட்டிருப்பாள். என் மனம் அவளை நோக்கித் தகித்தது. அவள் உள்ளம் எனது செய்கையின் மீது கனன்றது. அவள் மீது அபவாதம்! காரணம் நான்! - அதாவது ஓரளவில் நான்!

மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது. அவளது அசட்டுத்தனம்.

பிறகு அங்கிருக்க முடியுமா? உலகமே எனக்கு எரிமலையாக இருக்கிறதே! ஓரிடத்திலும் தலைவைத்துத் தூங்க முடியவில்லை. மறுபடியும் வந்தாகிவிட்டது.

கோபாலபுரத்துக் கோபுரம் மாந்தோப்பிற்கு மேல் தெரிகிறது. ஊருக்குள் போக முடியுமா? அவளுடைய எண்ணம், மனம், எல்லாம் உடலைப்போல் மறைந்தன. நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அதுதான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயமாம். மனிதன், விதி, தெய்வம்; தள்ளு - வெறும் குப்பை, புழு, கனவுகள்!

கோபாலபுரம்! இப்பொழுது பெயரைக் கேட்டாலே நடுங்குகிறதே! மறக்க முடியாத மனத்தின் பாறாங்கல் கோபாலபுரம்.

புதுமைப்பித்தன் கதைகள்

259