உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பூசனிக்காய்' அம்பி


எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் 'பூசனிக்காய் அம்பி' என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு வேறு பெயர் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

இந்தப் பெயர் எப்படி வந்திருக்கலாம் என்று எங்களூர் ஆராய்ச்சியாளர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்பியின் தலை வழுக்கை. அதன் மேல் பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி.

இதற்கு இடையில் கொஞ்சம் கவிதைக் கிறுக்குப் பிடித்த ஒரு கோஷ்டி, அவன், பூசனி காய்க்கும் காலத்தில் பிறந்ததினால் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று அறைந்தார்கள். இம் முக்கட்சிகளின் வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவிற்கும் வந்து சேராததினால் அதில் நாமும் சிக்கிக்கொள்ளாமல் ஊர்ப்பிள்ளைகள் மாதிரி அவனைப் 'பூசனிக்காய்' அம்பி என்று மட்டும் கூறி மகிழ்வோம்.

அம்பியின் ராஜ்யம் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஒரு வளைவு. திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி. இப்படிப் பல வளைவுகள் சேர்ந்ததுதான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல வம்சம் என்பவற்றின் உபமானம். அந்த வளைவில்தான் எனது 'பூசனிக்காய்' அம்பி தனியரசு செலுத்தி வந்தான். மாவடியா பிள்ளை வளைவு கட்டிட வேலைக்குப் பெயர் போனதல்ல. 'பூசனிக்காய்' அம்பியைத் தவிர அந்த வளைவில் ஒரு அபூர்வமும் கிடையாது. வருங்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கும் சூதாடிக்குக் கூட அம்பியை விட வேறு

260

'பூசனிக்காய்' அம்பி