உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றைப் புதிதாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை வராது. அந்த வளைவின் நடு மத்தியில் ஒரு கிணறு. அங்கு பகலில் வண்ணானைக் கூடத் தோற்கடிக்கும் வெளுப்பு வேலை நடக்கும். அவற்றையெல்லாம் காயப்போடும் ஒரு கம்பிக்கொடி. இந்தக் கம்பிக்கொடி அம்பியின் முக்கியமான துணைக்கருவியாகையால் அதைப்பற்றி அவசியம் கூற வேண்டியதாகிவிட்டது.

எனது வீட்டுச் சன்னல் அந்த வளைவை நோக்கியிருந்தது. எனது படிப்பு, படுப்பு, அம்பியின் திருவிளையாடல்களைப் பார்த்தல் எல்லாம் அச்சன்னலின் வழியாகத்தான்.

அம்பிக்கு ஏழு வயதிருக்கும். ஆனால் முகத்தைப் பார்த்தால் 10 அல்லது 12 வயதிற்கு மதிக்கலாம். அவன் உயரம் இன்னதுதான் என்று திட்டமாகக் கூற முடியாது. ஏனென்றால் அவன்மீது பெரிய மனிதனது கிழிந்த ஷர்ட் ஒன்று அலங்கரித்து நிற்கும். அதற்குள் சிறு துண்டு ஒன்று கட்டியிருப்பான் என்பது பலருடைய உத்தேசம். இம்மாதிரியான 'சாமியார்' அங்கி போன்ற சட்டைக்குள் இருந்து கொண்டே அவன் தனது திருவிளையாடல்களை நடத்திவிடுவான்.

'அந்தர்' அடிப்பது முதலிய சிறு வேலைகள் எல்லாவற்றிலும் அவனுக்குத்தான் வெற்றி. அவனது சட்டை எப்பொழுதாவது அவனைத் தடுக்கிவிட்டிருக்கிறதா என்றால் அது சரித்திரத்திற்குத் தெரியாத விஷயம். பகலில் எந்தச் சமயத்திலும் கம்பியில் 'பூசனிக்காய்' தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பது சாதாரணமான காட்சி. அவன் ஏறாத கூரை கிடையாது. அவன் தாண்டாத சுவர் கிடையாது. பூசனிக்காய் அம்பிக்கு பக்கத்திலுள்ள சுவர்களின் உயரம், தொத்தி ஏறும் வசதி முதலிய விஷயங்களில் தண்ணீர் பட்ட பாடு. அந்தச் சந்தில் இருக்கும் முனிசிபல் தகரத்தை அடித்து 'லொடபட' வென்று உருட்டிச் செல்வதுதான் அவனது அமைதியான விளையாட்டு.

'பூசனிக்காய்' அம்பிக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையா. சில சமயம் அவனது 'சினேகிதர்கள்' அவனைப் பேட்டி காண வருவார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் கல்லும் மண்ணாங்கட்டியும் ஆகாயமார்க்கமாகப் பறப்பதுதான் அவர்களது 'சினேக' பாவத்தை எடுத்துக் காட்டும். கடைசியாக, பெருத்த கூக்குரலுடன் அவர்கள் வளைவைவிட்டு ஓடுவதுதான் 'பூசனிக்காய்' அம்பியின் வெற்றி. இது எப்பொழுதும் தவறாது நடக்கும் இயற்கை.

பாரதியார், 'தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா' என்று பாடிவிட்டுப்போனார். 'பூசனிக்காய்' அம்பியும் அந்தச் சாரத்தை மிகவும் அனுபவித்திருப்பான் போல் தெரிகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷந்தானாமே. அம்பிக்குத் தனிமைச் சாரமும் ஒரு தடவை புளித்துப் போய்விட்டது. அவன் குருட்டுப்பிச்சைக்காரனை வளைவிற்கு உள்ளே இழுத்து வந்துவிட்டான். குருடனும் ஏதோ நீண்ட தெருவில் போவதாக நினைத்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். இவ்வளவையும் ஒரு குட்டிச்சுவரின்மீது அமர்ந்து

புதுமைப்பித்தன் கதைகள்

261