உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானக் குகை


வன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன்? வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்.

மதுரைச் சீமையில், குறுமலைக்கு அடுத்த சிற்றூரின் தலைமைக்காரத் தேவர் மகன். சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்திரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம்.

குழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்துவிட்டது. பத்திரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி, உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய்த்துவிட்டன.

பிறந்தவுடனேயே தாயார் இந்த உலகத்தில் குழந்தைக்குத் தன் இடத்தைக் காலிசெய்து கொடுத்ததினால், அவளைப் பொறுத்தவரை அந்தக் கவலை நீங்கிற்று என்றே சொல்லலாம். தலைமைக்காரத் தேவர் பொறுப்பின் பளு தாங்க முடியாதது. மறவக் குறிச்சிப் பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தார். அந்த அம்மையாருக்கு ஜாதகப்படி குழந்தை கிடையாது என்பதைத் தேவருடன் கூடிய ஐந்தாறு வருஷ வாழ்க்கை நிரூபித்தது. அதில் ஏற்பட்ட பொறாமை இந்த அசட்டுக் குழந்தையின் மீது பாய்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.

தேவரவர்களுக்கு இந்தக் குழந்தை என்றால் உயிர், கண்ணுக்கு கண். பலசாலிகள் தங்கள் ஆசைகளை எல்லாம் பலவீனர்களின் மீது சுமத்துவது - தங்கள் வெறுப்பைச் சுமத்துவதுபோலவே - இயற்கை. அந்த இயற்கை, விதியையும் கடக்க வேண்டியதாயிற்று.

பத்து வருஷங்களாகத் தலைமைக்காரத் தேவரின் பூஜைகளும், நோன்புகளும் குழந்தைக்கு 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு

புதுமைப்பித்தன் கதைகள்

319