உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்த்தைகளைச் சொல்லும் படிதான் செய்ய முடிந்தன. ஓட்டை வாளியை வைத்துத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு, பானையில் ஒரு சிரங்கை தண்ணீர் ஊற்ற முடிந்துவிட்டால் ஏற்படும் நம்பிக்கைக்கும் குதூகலத்திற்கும் எல்லையே இராது. தேவரவர்களுக்கு, தமது ஊமைப் பிள்ளையும் சகலகலா பண்டிதனாகி, நாட்டாண்மையைக் கம்பீரமாக வகிப்பான் என்ற அசட்டு நம்பிக்கையும் பிறந்தது.

குழந்தை 'அப்பா' 'அம்மா' என்று சொல்லும் சமயத்தில்தான் அதன் கண்களில் அறிவின் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்களுக்குக் கூட அசட்டுத்தனம் என்று படும்படி தகப்பனார் நடந்து கொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். "ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திக்கூடக் கட்டையாப் போகுமா?" என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்.

பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்லவில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார்.

தலைமைக்காரத்தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளையின் துணை கிடைக்காமற் போகும்? ஜாம் ஜாம் என்று எருமைச் சவாரி செய்து கொண்டு அவன் குறுமலைப் பிரதேசத்தைச் சுற்றி வர ஆரம்பித்தான். உபாத்தியாயர் சொன்னபடி உள்ளுணர்வு வளர்ந்ததோ என்னவோ, ஈசனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், ஆந்தையையும், கோட்டானையும், சில் வண்டுகளையும் தேடியலையும் முயற்சியில் எப்படியோ அவன் ஈடுபட ஆரம்பித்தான். அதில் மனத்தைப் பறிகொடுத்தான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு வீட்டுக்கு வருவதென்றாலே வேப்பங்காயாகி விட்டது.

தேவருக்குப் பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று, அவர் பிள்ளைக்காக வழிபட்ட கடவுளுக்கு ஆசையிருந்தது போலும்! பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது.

நீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே! அவனுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் என்று நினைத்தார்.

தேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா கிடைக்காமற் போய்விடும்? மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா? கருப்பாயி பேருக்கு ஏற்ற கருப்பாக

320

ஞானக் குகை