உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்தாலும் நல்ல அழகி. அவள் தேவரின் கட்டளையின் பேரில் அவன் முன்பு தென்பட ஆரம்பித்ததிலிருந்து, தேவருடைய மகன் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கருப்பாயியைக் கண்டவுடன் அவன் முகம் அறிவுக் களையுடன் பிரகாசிக்கும். கருப்பாயிக்கும், தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அந்த இருண்ட சித்தத்தில் மின்வெட்டுக்கள் போல் தோன்றலாயிற்று.

அச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து. 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது 'கருப்பாயி' என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக்குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும்.

2

குறுமலைச் சாரலில் பிரம்மாண்டமான விருட்சங்களும் கண்ணுக்கு ரம்மியமாகச் செழித்து நெருங்கிய புல் பூண்டுகளும் கிடையா. பெரிய நாய்க்குடைகள் ரூபத்தில் வளர்ந்த உடை மரம், கள்ளி, முட்புதர்களான குத்துச் செடிகள், இடையிடையே விழுது விட்ட ஆல், அதைச் சுற்றி வளரும் பனை, கண்ணாடிக் கொம்மட்டிக் கொடிகள் - இவைதான் குறுமலைக் காடு. முயலும், நரியும், கோட்டானும், ஆந்தையுந்தான் அங்குள்ள பயங்கரப் பிராணிகள். கல்லும் கள்ளி முள்ளும் நிறைந்து இடையிடையே குத்திப் பாறைகளைச் சுற்றிச் சுற்றிப் போகும் ஒற்றையடித் தடங்களில் மேய்ச்சலுக்குப் போகும் வழிகள் குறுமலைப் பிரதேசத்து மாடுகளுக்கும் மாட்டுக்காரப் பிள்ளைகளுக்குந்தான் தெரியும்.

இந்தக் காட்டில் சித்தர்களும், ஔஷத மூலிகைகளும் உண்டு என்பது ஐதீகம். மாட்டுக்காரப் பையன்கள் கொண்டுவரும் கதைகள் பிரத்யட்சப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டு வந்தன. இடையிடையே ஜடாமுனிக் கதைகளும் ஊரார் பேச்சின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வந்தன.

அன்று தலைமைக்காரத் தேவரின் மகனுக்குத் தாகம் அதிகரித்ததற்குக் காரணம், என்றுமில்லாதபடி சுட்டுப் பொசுக்கும் வெய்யிலின் கொடுமைதான். உச்சி வெய்யிலில் மாடுகள் கூட நிழலில் படுத்துவிட்டன. மலைச்சாரலில் நின்று சமவெளியையும் தூரத்தில் தெரியும் சிற்றூர்களையும் பார்த்தாலே, பூமி ஓர் அக்கினி லோகம்போல் தகதகவென்று கானலில் பிரகாசித்தது.

உயர வானத்தின் இரண்டொரு மூலைகளிலிருந்த பஞ்சு மேகங்களும் பார்க்கமுடியாதபடி கண் கூசும்.

குறுமலையில் ஒரே சுனைதான் உண்டு. இருண்ட ஊற்று என்றே அதற்குப் பெயர். உச்சி நேரங்களின் நாவரட்சியினால் செத்தாலும், மாட்டுக்காரப் பையன்கள் அந்தத் திக்கிற்குச் செல்லவே மாட்டார்கள்.


புதுமைப்பித்தன் கதைகள்

321