உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திடீரென்று, "சிவா!" என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!

"யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா? எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்...?"

"உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக் கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்..."

"சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?"

"உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால் தான் அர்த்தமுண்டு. எங்கள் [1]ஜூபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை..." என்று சிரித்தான் பைலார்க்கஸ்.

"சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுதான்!" என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்து கொண்டார் பரதேசி.

"நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா?" என்றார் மீண்டும் அச்சந்நியாசி.

"ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்..."

"ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது! அவனே அதோ வருகிறானே!" என்றார் சாமியார்.

பைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.

சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, "பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடி வந்தேன்!


  1. ஜூபிட்டர்: யவன இதிகாசங்களில் குறிப்பிடப்படும் தேவர்களுக்கு அரசன்; கிரகங்களில் வியாழன்

236

சிற்பியின் நரகம்