வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...!" என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.
"இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா?" என்று கேலியாகச் சிரித்தான் யவணன்.
"சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்" என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.
"என்ன, என்ன! நீயுமா?" என்றான் பைலார்க்கஸ்.
"பைலார்க்கஸ்! நீ நிரீசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே..."
"அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா! எனது வேலை அது..."
"சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்!" என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.
வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக் கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக் கொள்ளவிருந்தது.
"தெய்வச் செயல்!" என்றான் சாத்தன்.
"உன் சிருஷ்டி சக்தி!" என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.
"பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து!... அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என்
புதுமைப்பித்தன் கதைகள்
327