உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விநாயக சதுர்த்தி


ன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின.

நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்...

பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை,

புதுமைப்பித்தன் கதைகள்

367