நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும்.
"உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது.
"'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன்.
"ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது.
ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன்.
"அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும்.
அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின.
"ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி.
"கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன்.
"கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி.
"திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன்.
பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர்.
"சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.
368
விநாயக சதுர்த்தி