வில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.
பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.
அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே" என்றார் பிரமநாயகம் பிள்ளை.
"மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை" என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
"அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?" என்றார்.
"வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள் செல்லம்மாள்.
"நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது."
"ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது" என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.
மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.
"பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே" என்றாள்.
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.
புதுமைப்பித்தன் கதைகள்
517