உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.

பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, "பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.

"அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்" என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.

காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன சாப்பிட்டிய?" என்றாள்.

"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்" என்றார்.

"வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.

"புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே!" என்று எழுந்தார்.

"அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்" என்றாள் செல்லம்மாள்.

வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.

அடுப்பங்கரையில் 'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.

வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன்

518

செல்லம்மாள்