உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படியாக ஊழிகள் பல கடந்தன, தம்பதிகளுக்கு.

ஒரு நாள்...

முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்துவரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல, இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன.

ஆண் சிங்கம் போல, மிடுக்கு நடை நடந்து, எடுத்த கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை மனசில் 'அசை போட்டுக்கொண்டு' நடந்து வருகிறான் விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரியவில்லை. தாடகை என்ற கிழட்டுக் கொடுமை நசித்து விட்டது. நிஷ்டையில் ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு திருப்தி.

அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்கிறான். பார்வையில் என்ன பரிவு! இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல; அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர் நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு, அதன் பொறுப்புத் தெரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள்.

ஓட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி வருகிறான் லக்ஷ்மணன்; துரத்தி வருபவன் ராமன். புழுதிப் படலம் சிலையின் மீது படுகிறது...

என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதுகலிப்புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தபடியே நிற்கிறார்.

புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.

எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப் போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.

கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெரிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!

தெய்வமே! மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்தரம் அடைந்தது.

தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்விக புருஷன் எவன்? அந்தக் குழந்தையா?

அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன் ஆச்சரியத்தால் ரிஷியைப் பார்க்கிறான்.

விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை. அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை. கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் விளைவாக, தன்

528

சாப விமோசனம்