உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடம்பை, மாய வேஷத்தால் ஏமாறி, மாசுபடுத்திக் கொண்டவள்; கோதமனின் மனைவி. அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும் புற்று இருக்கிறதே; அதில் வலை முட்டையில் மோனத்தவங்கிடக்கும் பட்டுப்பூச்சி போலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்து விட்டானே!

நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கித் தயங்கி வருகிறான்.

மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சாப விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது பிரம்மாண்டமான மதிலாக அவனது வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. அவள் மனமும் மிரளுகிறது.

ராமனுடைய கல்வி, தர்மக்கண் கொண்டு பார்த்தது. தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது; வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது. புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.

உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் கரணசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப் படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? "அம்மா!" என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன்.

இரண்டு ரிஷிகளும் (ஒருவன் துணிச்சலையே அறிவாகக் கொண்டவன்; மற்றவன் பாசத்தையே தர்மத்தின் அடித்தலமாகக் கண்டவன்) சிறுவனுடைய நினைவுக் கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு குதுகலிக்கிறார்கள். எவ்வளவு லேசான, அன்புமயமான, துணிச்சலான உண்மை!

"நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக்கொள்ளுவதுதான் பொருந்தும்" என்கிறான் விசுவாமித்திரன் மெதுவாக.

குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கரகரப்பு ரஸபேதம் காட்டுகிறது.

கோதமனும், அவள் பத்தினியும், அந்தத் தம்பமற்றுத் திரடேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள நினைத்தது.

சாட்டையின் சொடுக்கைப் போலப் போக்கை மாற்றியமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது சாயும்பொழுதாவது போக வேண்டாமா? மணவினை, இரு கைகளை நீட்டி அழைக்கிறதே.


புதுமைப்பித்தன் கதைகள்

529