உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன் நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது?

"என்ன வேண்டும்?" என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் தள்ளியது.

"பசிக்கிறது" என்றாள் அகலிகை, குழந்தை போல.

அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேக்கத்தில் காட்டின.

'அந்த மணவினை உள்ளப் பரிவு பிறந்த பின்னர்ப் பூத்திருந்தாலும் ஏமாற்றின் அடிப்படையில் பிறந்ததுதானே! பசுவை வலம் வந்து பறித்து வந்ததுதானே!' என்று கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித் தன்னையே சுட்டுக் கொண்டது.

அகலிகை பசி தீர்ந்தாள்.

அவர்களது மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள்.

கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின் கவலை.

அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை.

சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.

2

அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்றுத் ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடி படராத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக் கொண்டு தர்மவிசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது பரிபூர்ண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால் கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி இல்லாவிடின் தனது தர்மவிசாரமே தவிடுபொடியாகிவிடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.

அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். அவனை நினைத்துவிட்டால் அவள் மனமும் அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக்கூட

530

சாப விமோசனம்