உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடங்கொடாதபடி நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில் இயற்கையின் தன்மை மறைந்து இயல்பு மாறியது. தன்னைச் சூழ நிற்பவர்கள் யாவருமே இந்திரர்களாகத் தென்பட்டார்கள்; அகலிகைக்குப் பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. அந்தக் காலத்திலிருந்த பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின.

ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக்கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள்.

வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று.

அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததீசி வந்தார். மதங்கரும் வாரணாசி செல்லும்போது கோதமனைக் குசலம் விசாரிக்க எட்டிப் பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்தபோதிலும் அகலிகையின் உடம்பு குன்றிக் கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட வழுவிவிடும்போல் இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும் களங்கமற்ற கண்கொண்டு பார்க்கக் கூசியது. குடிசையில் ஒளிந்து கொண்டாள்.

கோதமனுடைய சித்தாந்தமோ இப்பொழுது புதுவித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷ வித்து முழுவதுமே நசித்துவிடும் என்றாலும் அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை. தனது இடிந்துபோன குடிசையில் மறுபடியும் பிறர் கூட்டிவைத்த ஒரு தன்மையில் இருந்துகொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத் திருப்பிவிட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை இல்லை; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்.

சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயாசமயங்களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக் குழந்தை, கோதமனின் மனசில் லக்ஷ்ய வாலிபனாக உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாஸ்திரத்தின் தூண்டாவிளக்குகளாகச் சாயனம் (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம் தம்பதிகளின் பந்தந்தான் என்ன? அது கோதமனுக்குத் தனது அந்தக் காலத்து வாழ்வை ஞாபகப்படுத்தும்.

அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும் தன்மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு. அவள் வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் புன்சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளி காட்டும்.


புதுமைப்பித்தன் கதைகள்

531