உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.

"அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.

அர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். "அண்ணாச்சி இங்கே ஓர் எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.

இப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.

4

சாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.

அவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோடும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன்ற

புதுமைப்பித்தன் கதைகள்

587