உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார்? ஏன் கூப்பிட வேண்டும்? பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.

கடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்து கொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.

நல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.

சந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை "அத்தான்" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.

ஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.

மங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.

சாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.

ஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.

இரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.

"நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள்? சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஓர் ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்" என்றார் ஆனையப்ப பிள்ளை.

மறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள்? அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.


588

சித்தி