"சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா?" என்றார் செண்பகராமன் பிள்ளை.
"அவளை உங்களுக்குத் தெரியாதா? கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச் சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
இரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.
'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா?' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.
பலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.
"ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது? நான் ஆண்டி" என்றார் சாந்தலிங்கச்சாமி.
"அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
இருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.
குனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, "அப்பா செண்பகராமா!" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.
"அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்?" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.
பக்கத்தில் இருந்த சிறுவன், "சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே? நான் தானே பக்கத்தில் நிக்கேன்?" என்றான்.
'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போலும்!' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.
காவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா?
"அத்தான், நேரத்தைக் களிக்காதிய" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.
புதுமைப்பித்தன் கதைகள்
589