உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்விகற்ப சமாதி


ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.

கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, 'ரன்னர்' எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா? அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டடத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக

புதுமைப்பித்தன் கதைகள்

597