உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் "இந்தப் பசங்களே இப்படித்தான் சார்" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம்! மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.

உலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.

குருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.

வரும்போதே, "என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா?" என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். 'மேலத் தெரு கொசப்பயல்' என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.

தென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.

நிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.

உலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.

சுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும்? அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.

அதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர்

598

நிர்விகற்ப சமாதி