உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம். பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் 'இலக்கிய சேவைக்கு' ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும். ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், 'கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது' என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார். அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.

இதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.

பண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நினைத்தார். உலகநாத பிள்ளை-

புதுமைப்பித்தன் கதைகள்

599