உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புழு கண்ணில் விழுந்தது. ‘மலப்பிறவி... பல ஜன்மம் பல மரணம்’. சீச்சீ..., மனம் குமட்ட வேறு ஒரு பனை மூட்டினடியில் போய் அமர்ந்தார். அது விடலிப் பனை. சற்றுத் தாழ்வாக இருந்ததனால் நிழலும் சுமாராக இருந்தது. முன் குத்தலும் இல்லை. ஆனால் சரல் குத்தியது.

‘மனமோ பிறவா நெறி’ காட்டாமல் மீண்டும் மீண்டும் மலப்புழு மாதிரி உடற் கூறின் விளைவாக எழுந்த அவசங்களின் பால் விழுந்து குமைந்தது. மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக் கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத் தானா... நான் பிறப்பதற்கு முன்... என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞை உண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப் பற்றியுள்ள சூழ்நிலைக்குத் தான் பிரக்ஞையுண்டா?

‘இந்தப் பனை, இந்தப் பனை விடலியெல்லாம் என் பிரக்ஞைக்குள் பட்டது. இது முளைத்தது எனக்குத் தெரியும். இது முளைப்பதற்கு முன் இந்தக் கட்டாந்தரை, இந்த நிழல் கூட அற்று இருந்தது தெரியும். முந்திய ஆடிக் காற்றில் விழுந்ததே அந்தப் பனை - அது எங்கு நின்றது என்று கூட நிதானிக்க முடியாமல் வரட்டுக் கட்டான் தரையாகத்தான் கிடக்கிறது... நான் பிறப்பதற்கு முன்பு... பரமசிவம் பிள்ளை என்ற ஒருவன் விருப்பு வெறுப்பு, ஆசை துயரம், கவலை பொறுப்பு முதலியவற்றுடன் கூடிய ஒரு ஜந்து; வாழையடி வாழையாக வரும் விளையாட்டின் வித்தைகளை வாலாயமாகக் கற்று, அதற்கு இசைந்தோ இசையாமலோ விளையாடி... பிறகு பரமசிவம் என்ற பெயர் மட்டும் போகுமிடத்துக்கு வழி வைத்துவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டோ அல்லது புது வழியிலோ போய்விடும் ஒரு தோற்றம்... ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா? நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்?... வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது. வருகிறது ஒரு யோனித் துவாரம், போகிறது மற்றொரு யோனித் துவாரம்... பிரகிருதி என்ற அன்னையிடந்தானா? அல்லது கருவூரிலிருந்து கருவூருக்குச் செல்லும் பாதை தான் மனித வாழ்வா? முடிவில்லா வித்தையா? முறையில்லாத் தந்திரமா...?’

கைலாசபுரத்து ஆற்றங்கரை பனைமூட்டடியிலே உட்கார்ந்த பரமசிவம் பிள்ளையின் மனம் ‘தான்’ இல்லாத ஒரு காலத்தைச் சற்று சிரமத்துடன் கற்பனை பண்ணத் தொடங்கியது.

1

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் கைலாசபுரத்திலும் சூரியோதயம் சூரியாஸ்தமனம் தெரிந்துகொண்டுதானிருந்தது. அப்பொழுது ஆற்றங்கரைக்கு வரும் பாதையில் அத்தனைக் காரைக் கட்டிடங்கள்

புதுமைப்பித்தன் கதைகள்

675