உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிடையாது. புழுதி கிடையாது. சுகமான மருத மர நிழல் உண்டு. மாடு படுத்திருக்கும். மனித நாகரிகமே அந்தப் பிராந்தியத்தில் அப்பொழுது உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருந்த மாதிரிதான் தென்பட்டது. ஆனால் இயக்கம் இருந்துகொண்டுதானிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர்த்தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது திங்கட்கிழமை என்று நாம் சொல்லும்படியாகிவிட்ட ஒரு தன்மை போல, நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான். அது அப்படியே உட்கார்ந்து கொண்டே இருந்தால், இப்பொழுது காரைக் கட்டிடங்கள் எப்படி முளைத்திருக்கும்? மருத மரத்து நிழல் இன்னும் இருந்து கொண்டிருக்குமே! அப்பொழுது காற்றடித்தது; மழை பெய்தது; நதியில் வெள்ளம் வந்தது. பனை மரங்கள் சாய்ந்தன; விறகாயின... விட்டமாயின. விடலிகள் முளைத்தன. சூரியாஸ்தமனம்... சூரியோதயம்... ஆற்றங்கரைப் படிக்கல்லில் அழகியநம்பியா பிள்ளை வேட்டி துவைப்பார்... உட்கார்ந்திருந்து அழுக்குத் தேய்ப்பார். ஆற்றில் மூழ்கிக் குளிப்பார். நின்று திருநீறு அணிவார். அனுஷ்டானாதிகள் செய்வார். படிமீது மருத நிழல்கள் கவிந்திருக்கும். ஆனால் இப்போது படிக்கல் சரிந்துவிட்டது. பாதை உண்டு. மணலிலும் தெற்றுக்குத்தாக நிற்கும் படிகளை மறைத்தும் தண்ணீர் ஓடும். இப்போது மருத மரம் இல்லை. வெயில் உண்டு. கல் வழுக்கும்.

அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால், கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது... அதிலே விளைந்த அனந்த கோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று. நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று, தவளையாயிற்று, வாலிழந்தது, குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது...

கைலாசபுரத்திலே மரங்கள் மொக்கு விட்டன. பூ மலர்ந்தது. தேன் வண்டுகள் வரத்துப் போக்கு வைத்துக் கொண்டன. மரமும் சூலுற்றது... பிஞ்சுற்றது...

கருவூருக்கு வடக்கே உதரபுரியிலேயிருந்து ஹுங்காரம் போன்ற அலறல் பிறந்தது. வேதனையிலே குரல் பிறந்தது. கைக்கட்டை விரல்களை உள்மடக்கிப் பிடித்துக்கொண்டு தலை குப்புற வந்து விழுந்தது ஒரு பிண்டம் - ஒரு ஜன்மம். பிரக்ஞை வந்தது. காட்டுமலம் போயிற்று. ஜன்மம் வீறிட்டது. கைகளையும் கால்களையும் சுண்டி உதறிக் கொண்டு அழுதது. கருவூர்க் கயிற்றைக் கத்தரித்து விட்டார்கள்.

676

கயிற்றரவு