உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனி ஜன்மமாயிற்று. தனித்தன்மை பெற்றது. முலை சுவைத்தது... உறங்கியது... அழுதது... முலை சுவைத்தது...

கைலாசபுரத்திலே மரங்கள் காய்த்தன. கொத்துக் கொத்தாக, பச்சைப் பச்சையாகக் காய்த்துத் தொங்கின. மரத்தையே தரையில் இழுத்துக் கிடத்திவிடும் போலிருந்தது அந்த வருஷத்துக் காய்ப்பு.

2

நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகியநம்பியா பிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.

"அப்பா யாரு?" என்று கேட்கிறார் அழகியநம்பியா பிள்ளை.

குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.

"முட்டாப்பயலே; நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம்... பரமசிவம் பிள்ளை!" என்றார் அழகியநம்பியா பிள்ளை.

"அப்பா யாரு?" என்றார் அழகியநம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.

"பரமசிவம் யாரு?" என்று கேட்டார் அழகியநம்பியா பிள்ளை.

"நான்" எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.

"போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!" எனக் குழந்தையை மெய்ம்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.

குழந்தையும் பரமசிவமாகி நான் - நீ - அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது. அம்மா - அப்பா - தெரு - ஊர் எனப் பரிசய விலாசம் படிப்படியாக வளர்ந்தது. வாத்தியார், பிரம்படி, பிறகு கல்வி, சில்லறை அறிவு, பிரம்புக் கொட்டடியிலும் மற்றப்படி இனிக்கின்ற, அவசியமான, பிரியமான ஞானச் சரக்குகளை வேற்று அங்காடிகளிலும் பரமசிவம் பெற்றார். சீனி இனிக்கும் - நெருப்புச் சுடும் - அப்பா கோபிப்பார் - கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற நேர் அனுபவ, அனுபவ சூன்யக் கருத்துக்களை எல்லாம் நான், என்னுடைய என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் கட்டிடம் அமைக்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் - பரமசிவம் - அடி - உதை - பலம் - பலீன் சடுகுடு முதலிய பாதைகளில் செல்ல, கிழமைகள் என்ற கால அமைதி தாராளமாக வசதி செய்து கொடுத்தது.

அழகியநம்பியா பிள்ளையின் வேலைகளை மேற்கொள்ளும் காலம் வந்தது. பரமசிவம், பரமசிவம் பிள்ளையானார். உடல் வாட்ட சாட்டமாக அமைந்தது. உடம்பில் வலு, நெஞ்சில் உரம், மனசில் நம்பிக்கை, தைரியம். வீட்டிலே சமைத்துப் போட... பிறகு வம்ச விருத்திக் களமாக்கிக் கொள்ள யுவதி... உச்வாச நிச்வாசத்தை விட என்ன சுகம்... போகம் - உடலில் உள்ள வலு வீரியமாகப் பெருக்கெடுத்து ஜீவ தாதுக்களை அள்ளி விசிறியது. இப்பொழுது

புதுமைப்பித்தன் கதைகள்

677